search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா அரசு"

    மேகதாது அணை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது வேதனை அளிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #DMK #MKStalin #EdappadiPalaniswami #MekedatuDam
    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற முன்னாள் எம்.எல்.ஏ., பரணிகுமார் இல்ல திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இன்று நாட்டில் நிலவும் பிரச்சனைகள் அனைவருக்கும் தெரிந்தது. அதனை எடுத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி இன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முழுமையான திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது.

    மேகதாது அணை பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பாராளுமன்ற மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்கள் 55 பேர் பிரதமரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தோம். மேலும் இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, கர்நாடக அரசின் இந்த அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம்.

    இதற்கிடையே பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பேசும்போது, “காவிரியின் குறுக்கே மத்திய அரசு மற்றும் தமிழகத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது. இது தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை கேட்டு முடிவெடுப்போம்” என தெளிவாக கூறியுள்ளார்.

    ஆனால் கர்நாடக அரசு தன்னிச்சையாக, மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதனை மத்திய அரசும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


    ஆனால் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. இது வேதனை அளிக்க கூடியது. ஆட்சியாளர்கள் தமிழகத்தை பற்றி சிந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் வாய்ப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, பெரியசாமி, கே.என்.நேரு, வேலூர் மாவட்ட செயலாளர் காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKStalin #EdappadiPalaniswami #MekedatuDam
    மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வெற்று அரசியல் செய்து வருகின்றனர் என ஈஸ்வரன் தெரிவித்தார். #eswaran #mekedatuissue #karnatakagovt

    பழனி:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் பழனியில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பழனி கோவில் வருமானத்தில் ஒரு பகுதியை நகரின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளை ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். அப்போது தான் கல்வியின் தரம் உயரும். அத்துடன் கோவில் நகரமான பழனியை தலைமையிடமாக கொண்டு புதிதாக மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.

    நல்லதங்காள் அணை, பச்சையாறு அணை உள்ளிட்ட திட்டங்கள் பழனி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு மிகவும் அத்யாவசியமானது ஆகும். ஆனால் அந்த திட்டங்கள் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டது வேதனை அளிப்பதாக உள்ளது. அந்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். விடுதலை போராட்ட வீரரான தீரன் சின்னமலைக்கு பழனி பஸ் நிலைய வளாகத்தில் சிலை வைக்க வேண்டும்.

    நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை தி.மு.க.வுடன் கொங்குநாடு நாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணியாகவே செயல்படும். 2014-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தேசிய நதிநீர் இணைப்பையும், கங்கை- காவேரி இணைப்பையும் நடத்தி காட்டுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அவை கடற்கரை மணலில் எழுதிய வாசகம் போலவே ஆகிவிட்டது.

    இதன் காரணமாக தமிழகத்தில் பா.ஜ.க. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. சுற்றுலா தளமான பழனியில் இருந்து ஈரோடு, சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளுக்கான ரெயில் சேவை திட்டம், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்ட உடன் கூட்டணி கட்சியான தி.மு.க. தலைமையில் நிறைவேற்றப்படும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. செயல்பாடு மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

    எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி நீடிக்காது. மேகதாது அணை பிரச்சினையில் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது. இது தெரிந்திருந்தும் கர்நாடகத்தை சேர்ந்த கட்சியினர் வெற்று அரசியல் செய்யவே தீவிரம் காட்டி வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். #eswaran #mekedatuissue #karnatakagovt

    மேகதாது அணையின் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கிய நிலையல், இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. #MekedatuDamIssue #AssemblySpecialSession
    சென்னை:

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

    இந்த நிலையில் தமிழக சட்ட சபையில் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்,  மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்தை முன்மொழிந்தார். 

    அந்த தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதன்பின்னர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதும், குரல் வாக்கெடுப்பு நடத்தி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.  #MekedatuDamIssue #AssemblySpecialSession
    மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவித்துள்ளது. #MekedatuDam #TNGovt #SupremeCourt
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போது ஆய்வுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கிறோம். அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது.

    இதற்கிடையே மேகதாது அணை தொடர்பாக செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து இருந்தது.

    அணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. குடிநீர்தேவை, மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே அணை கட்டுவதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்றுவிட்டதால் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபடும். அதற்கும் மத்திய அரசு ஒப்புதலை பெற்று விட்டால் மேகதாதுவில் அணை அமைவதை தடுக்க இயலாது.

    மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.


    இந்த நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 30-ந்தேதி வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில் “கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும், திரும்ப பெற உத்தரவிடவேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தமிழக அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு வக்கீல் உமாபதி முறையீடு செய்தார்.

    தமிழக அரசின் முறையீட்டை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவித்தது.

    இதற்கிடையே மேகதாது அணை பிரச்சனை குறித்து விவாதித்து தனித்தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது. #MekedatuDam #TNGovt #SupremeCourt
    மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி இன்று திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #MekedatuDam #DMK #MKStalin #Congress
    திருச்சி:

    கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது.

    இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார் . மேலும் தமிழக அரசு இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு காவிரி நீர் வருவது ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்தப்பட்டுவிடும். இதனால் டெல்டா மாவட்டங்களில் ஒருபோக நெல் சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதால் தமிழகத்தில் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு விவசாய அமைப்புகளும் மத்திய அரசை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    இதற்கிடையே மேகதாது பிரச்சனை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கடந்த 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டியது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் 9 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய அணை கட்டும் கர்நாடகாவின் விரிவான திட்ட மதிப்பீட்டறிக்கை தயாரிப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இது போன்று தன்விருப்பம் போல் புதிய அணை கட்டி தமிழகத்தின் விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் வஞ்சிக்கும் முயற்சிகளில் கர்நாடக மாநில அரசு ஈடுபடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.

    மேலும் மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி இன்று (டிசம்பர் 4-ந்தேதி, செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணியளவில் திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


    அதன்படி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பார்வர்டு பிளாக் கட்சி மாநில துணைப்பொது செயலாளர் வெங்கடேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தி.முக. தோழமை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    மேலும் இந்த போராட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். #MekedatuDam #DMK #MKStalin #Congress
    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி என்னிடம் ரூ.30 கோடி பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.எ. தெரிவித்துள்ளார். #CongressMLA #LaxmiHebbalkar
    பெங்களூர்:

    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதசார் பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல்- அமைச்சராக உள்ளார்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவி கேட்டு 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

    பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சி செய்வதாக முதல்வர் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., தன்னிடம் பா.ஜனதாவினர் ரூ.30 கோடி பேரம் பேசினர் என்று கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான லட்சுமி ஹெப்பான்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் போனில் பேசினார். அப்போது காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும். நான் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தால் ரூ.30 கோடி பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன்.

    பா.ஜனதா தலைவர் பேசிய போன் அழைப்பை பதிவு செய்து காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பினேன். என்னிடம் நடத்திய பேரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

    பா.ஜனதாவின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி காங்கிரசை விட்டு விலக மாட்டேன். ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சதியை வெளிக்கொண்டு வரவே பேரம் பேசிய விவரத்தை வெளியில் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #CongressMLA #LaxmiHebbalkar
    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று வைகோ மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #vaiko #Cauverymanagementboard

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் கண்மூடித் தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக காவரி நீரை திறக்க மாட்டார்கள் என ஏற்கனவே கூறினேன்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அணை பாதுகாப்பு, சி.ஆர்.பி.எப். வீரர்களை பாதுகாப்புக்காக நிறுத்துவது போன்ற எந்த அதிகாரமும் இல்லாமல் அதிகாரமற்ற அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் உள்ளது.

    தற்போது உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மாறும் வரை நமக்கு நீதி கிடைக்காது.

    முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அணை பாதுகாப்பாக உள்ளது என ஆய்வு செய்து கூறி உள்ளனர். ஆனால் இது குறித்து தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #vaiko #Cauverymanagementboard

    ×